வில்லியனூர்

இறைவன் அருள் தரும் கோகிலாம்பாள் உடனமர் திருக்காமீஸ்வரர் ஏழுந்து அருளியுள்ள இத்திருக்கோயில் இருக்கும் இடம் வில்லியனூர் ஆகும்.

இவ் வில்லியனூர் ஆனது புதுச்சேரியில் இருந்து தென் மேற்குத் திசையில் சுமார் 10- கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

வில்வநல்லூரின் பழமையை அறிந்து உணரக் கல்வெட்டுக்கள் துணை நிற்கின்றன. இந்நிலையில் விழுப்புரம் வட்டம் திருவாமாத்தூரிலுள்ள அபிராமேச்சுரத்துக்கல்வெட்டு (கி.பி 998) முதலாம் இராசராச சோழனின் 13 ஆவது ஆண்டில் வரையப்பெற்றது.

வில்லியநல்லூர்ச் சிவன் கோயிலில் உள்ள சோழர் கோப்பெருஞ்சிங்கன், பாண்டியன் , சம்புவராயன், விசயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகள் அனைத்தும் இவ்வூரின் பெயரை வில்லியநல்லூர் என்றே குறிப்பிடுகின்றன. காலப்போக்கில் மருவி இன்று வில்லியனூர் என அழைக்கப்படுகிறது. வில்லைப் புராணத்தில் இவ்வூர் வில்லவநல்லூர், காமிசம், வில்லபுரி, வில்லமாநகரம் என்று குறிப்பிடப்பட்டாலும் அவையாவும் தல புராண அளவிலேயே நின்றுவிட்டன. வில் ஆளுதலில் வல்ல வீரர்கள் (வில்லியர்கள்) நெடுங்காலத்திற்கு முன்னர் வாழ்ந்ததால் இவ்வூர் வில்லியநல்லூர் என்ற பெயர்க் காரணமும் கொண்டது.

வில்லியனூர் என்ற வில்லியநல்லூர் வரலாறு

கமலாபுரி அரசனான தருமபால சோழன் என்னும் அரசன் இத்திருக்கோயிலின் இறைவனை வழிபட்டு இவ் இறைவனுக்கு ஆலயம் எடுப்பித்து, தேர் இயற்றி , கோயிற்பணியாளரை நியமித்து, ஊர் உண்டாக்கி, சிவப்பணி செய்தான் என்று வில்லைப் புராணத்துத் தருமபாலச் சுருக்கம் கூறுகிறது. ஆண்டுதோறும் வைகாசித்திங்களில் ஆண்டுப் பெருவிழா நடத்தியதைப் பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுத் தெளிவுபடுத்துகிறது. .