திருப்பணி

அருள் தரும் திருக்காமீஸ்வரர் என்னும் திருநாமத்தை ஏந்தி அருள் புரியும் இப் பெருமானை மும்மூர்த்திகளில் ஒருவரான பிரமன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க வேண்டும் என வில்வ வனமாகிய இத்திருத் தலத்தில் சிவலிங்க பிரிதிஷ்டை செய்து பூஜை செய்ததால் தோஷம் நீக்கிய இப்பெருமானைத் தொடர்ந்து இந்திரன், சந்திரன்,மன்மதன் முதலிய தேவர்கள் சிவலிங்க பூஜை செய்து சிறப்பான பலன்களைப் பெற்றார்கள்.அத்தகைய அருள் புரியும் வல்லமை பெற்ற இத் திருகாமீஸ்வரர் ஆலயம் பின் பதினொன்றாம் நூற்றாண்டில் தரும பால சோழமன்னரால் ஆலயமும், நகரமும் நிர்மாணிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலம் ஆனது 1880,1923 மற்றும் 1987 ஆண்டு திருப்பணி செய்யப்பட்டது.

கோயிலின் பரப்பளவு நீளம் 368 அடியாகவும், அகலம் 502 அடியாகவும் இராஜ கோபுரம் 67 அடியாகவும், தென் திசைக் கோபுரம் 97 அடியாகவும், 1.8 ஏக்கர் பரப்பளவு உள்ள திருக்குளமும் மற்றும் 67 அடி உயரம் கொண்ட திருத்தேர் உடைய இத்திருக்கோயில் மிகவும் சிதலமடைந்து இருந்தது.

மிகவும் பழைமையானதும், சர்வசக்தி படைத்ததும், மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட இத்திருக்கோயில் அவ்வப்போது திருப்பணிகள் செய்து புதுப்பித்துக் குடமுழுக்கு செய்யபட்டது. அவ்வணம் தற்போது மிகவும் சிதலமடைந்துள்ள இத்திருதலத்தைப் புதுப்பித்து திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்யும் நோக்கத்துடன், புதுவை அரசு இந்து அறநிலையத் துறை, புதுவை அரசு இலாக்காக்கள், புதுவை அரசு மாண்புமிகு முதல்வர் திரு ரங்கசாமி அவரகளும், கோயில் நிர்வாகி , தொழில் நுட்ப வல்லுநர்கள், வில்லியனூர் நகர வாசிகள் மற்றும் பக்த அன்பர்கள் மூலம் பல கோடி கணக்கில் செலவுகள் செய்து இத்திருத்தலத்தைப் புதுபித்து, திருபணி செய்து குடமுழுக்குச் செய்திட 3-12-2012 திங்கள் கிழமை அன்று அருள் தரும் கோகிலாம்மிகை உடனமர் திருகாமீசுவரர் ஆலய பாலஸ்தாபன-திருப்பணி தொடக்கவிழா நடைபெற்றது.